யாழில் அனுமதியற்ற நடைபாதை கடைகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு..!!!
டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் பொலீசாருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த விடையம் தொடர்பில் உடன் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் ஆளுநர் ஆலோசனை வழங்கி உள்ளார். மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.