யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில், வீதியில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் ஒன்று , இளைஞனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதி வீதியில், நேற்றைய தினம் புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த வன்முறை கும்பல் , இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு, தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதனை அடுத்து இளைஞனின் வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த உடைமைகளை அடித்து உடைத்து சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் , கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.