யாழ்.புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம்; 6 பேர் கைது - மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!!
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு , அவர்களை பொலிஸார் கடுமையாக எச்சரித்ததுடன் , போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை வழங்கி பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட , யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் , போதை கலந்த பாக்குகள் , மாவா பாக்கு உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களிடம் அவற்றை வாங்கி வந்த மாணவர்களை பொலிஸார் இனம் கண்டு கொண்டனர்.
அவ்வாறு இனம் காணப்பட்ட சுமார் 15 மாணவர்களையும் பொலிஸார் கடுமையாக எச்சரிக்கை செய்து, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டி , பெற்றோர்களிடம் கையளித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட 06 இளைஞர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.