Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - மிதுனம்..!!!

SHARE


மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )


மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூக பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! புதனின் ஆதிக்கத்தில் பிறந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதில் தலை சிறந்தவராக விளங்கும் உங்களுக்கு வரும் 2024-ல் சகல சௌபாக்கியத்தையும் அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற மிகுந்த பலன்கள் ஏற்படும். உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். சர்ப்ப கிரகம், சாயா கிரகம், நிழல் கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது 4-லும், ராகு 10-லும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிக்க இடையூறுகள், தாய் வழியில் தேவையற்ற மனக்கவலை, அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. பொதுவாக எந்த செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நிலையான வருமானம் கிடைக்கும். நீங்கள் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். புதிய ஆர்டர்கள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யும் உங்கள் எண்ணம் நிறைவேறும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் யோசித்து செயல்பட்டால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றினை வரும் நாட்களில் சற்று தள்ளி வைப்பது நல்லது.

உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு மிக மிகச் சிறப்பாக இருக்கும்.

குடும்பம்:

ஆண்டுக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் 01-05-2024 முடிய சஞ்சாரம் செய்ய இருப்பதால் முதல் 4 மாதங்கள் உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருப்பது மட்டும் இல்லாமல் திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. ஆண்டின் தொடக்கத்தில் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள், திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும்.

வரும் 01-05-2024-க்கு பிறகு குரு விரைய ஸ்தானமான 12-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் சற்று ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கணவன், மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் செயல் வடிவம் பெறும். ஒரு சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய ஒரு உன்னத நிலை உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. எது எப்படி இருந்தாலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் 2024-ம் ஆண்டில் உண்டு.

உடல் ஆரோக்கியம்:

கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீண் மருத்துவ செலவுகள் குறைந்து அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும்.
SHARE