Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - துலாம்..!!!

SHARE


துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )


மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே! மற்றவர்கள் தவறுகளை தைரியத்தோடு தட்டிக்கேட்கக் கூடிய துணிச்சல் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பது மிகச் சிறப்பான அமைப்பு என்பதால் அனைத்து வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களுக்கு பிரச்சினை தந்தவர்கள் கூட தற்போது உங்கள் நல்ல பண்பை புரிந்து கொண்டு நட்புடன் பழகக்கூடிய உன்னத நிலை உண்டாகும். கடந்த காலங்களில் நிலவிய அலைச்சல் டென்ஷன் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய உன்னத நிலை உண்டாகும். குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து கணவன், மனைவியிடையே அன்யோன்னியம் சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும்.


தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொண்ட கடந்த கால முயற்சிகள் அனைத்தும் தற்போது வெற்றியைத் தரும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். அரசு அதிகாரி வகையில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறக்கூடிய உன்னத நிலை உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.


உத்தியோகம்:

வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல் படக்கூடிய ஒரு பலமும் நல்ல வாய்ப்புகளைப் பெறக்கூடிய யோகமும் வருகின்ற நாட்களில் உண்டு. வெளியூர் வெளிநாடு வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது நல்ல செய்தி கிடைக்கும். அதிகாரியிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான நிலை ஏற்படும். உங்கள் மீது பழிச்சொற்கள் சொன்னவர்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைவதால் நீங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.


குடும்பம்:

ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் வரும் 2024-ம் ஆண்டில் முதல் 4 மாதங்கள் உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்வது உன்னதமான அமைப்பு என்பதால் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் இல்லத்தில் மங்கலகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உங்களுடைய கனவுகள் எல்லாம் நிறைவேற கூடிய ஒரு அனுகூலமான நிலை இருக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும்.


உடல் ஆரோக்கியம்:

உடல் உபாதைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் விலகி தற்போது சேமிக்க கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

வரும் 01-05-2024 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குரு உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதி என்பதால் 8-ல் சஞ்சரிக்கின்ற பொழுது மற்ற ராசிகளுக்கு தரும்படி பெரிய கெடுதிகளை செய்ய மாட்டார். ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும் என்றாலும் நீங்கள் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது.

சனி, ராகு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எந்த வித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து 2024-ம் ஆண்டில் ஒரு உயர்வான நிலையினை எட்ட கூடிய யோகமானது உங்களுக்கு உறுதியாக உண்டு.
SHARE