2024 புத்தாண்டு ராசிபலன் - ரிஷபம்..!!!
ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )
ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வமும், சமூக சேவைகளில் நாட்டமும் கொண்ட ரிஷபராசி நேயர்களே! சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலேயே ஆடம்பரத்தை அதிகம் விரும்பக் கூடிய நபராக இருப்பீர்கள். வரும் 2024-ம் ஆண்டில் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு செயல்படுவது சாலச்சிறந்தது. 2024-ல் உங்கள் ராசிக்கு சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு பகவான் ஆண்டு முழுவதும் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய உதவியானது தக்க நேரத்தில் கிடைப்பதால் வளமான பலன்களை பெற முடியும். கு எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட்டால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கூட எளிதில் கையாண்டு அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.
தொழில், வியாபாரம்:
உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரனுக்கு நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் வரும் 2024-ல் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் தான் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும். ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்படுவது, முக்கிய முடிவுகள் எடுக்கின்ற பொழுது பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போதைக்கு முடிந்தவரை தள்ளி வைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரு சில முக்கிய விஷயங்களில் குறிப்பாக வேலையாட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வரும் நாட்களில் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடைய முடியும். கூட்டாளிகள் ஆதரவு உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலமாக ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும்.
உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் கவனமாக செயல்பட்டால் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 2024-ல் தொடக்கத்தில் விரைய ஸ்தானத்திலும் 01-05-2024 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் சற்று குறையும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் கவனத்தை செலுத்துவது மிக மிக நல்லது. உங்கள் உழைப்புக்கான சன்மானத்தை பெறுவதில் ஒரு சில சுணக்கங்கள் இருந்தாலும் சற்று தாமதமான அணுகூலத்தை பெறுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலம் தேவையற்ற அலைச்சல்களும் வீண் செலவுகளும் உண்டாகும். குரு சஞ்சாரம் சற்று சுமாராக இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
குடும்பம்:
குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் ஒரு சில மன கவலைகள் இருந்தாலும் அவர்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் கிடைக்கும். 2024 மே 1-ம் தேதி முதல் குரு ஜென்ம ராசியில் இருந்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் ஒரு சில மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பங்காளி வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கலகரமான சுப காரியங்கள் கைகூடும். மனைவி, பிள்ளைகளுடைய ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருந்து மனமகிழ்ச்சி ஏற்படும். மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி தரக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
உடல் ஆரோக்கியம்:
வேலைப்பளு கூடுதலாக இருப்பதால் உங்களது ஓய்வு நேரம் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டு மன நிம்மதி குறைவு ஏற்படும்.