Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - கும்பம்..!!!

SHARE


கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )


பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே! சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல பண்பு கொண்டவராகவும், நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவராகவும் செயல்படும் குணம் கொண்டவராக விளங்குவீர்கள். ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். எதிலும் சட்ட விதிக்கு உட்பட்டு நடந்தால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும்.

சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிக மிக நல்லது. நீங்கள் வெளிப்படையாக மற்றவர்கள் நலம் கருதி பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொண்டு உங்களிடம் வீண் வாக்குவாதம் செய்வார்கள்.

குரு பகவான் 7-ம் வீட்டை பார்ப்பார் என்பதால் ஆண்டு தொடக்கத்தில் திருமண சுபகாரியத்திற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால் அதில் அனுகூலபலன்கள் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.


தொழில், வியாபாரம்:

தொழில், வியாபார ரீதியாக எதிர்நீச்சல் போட வேண்டிய நேரம் ஆகும். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதைக்கு பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலை எடுக்க முடியும். வேலை ஆட்கள் செயல்பாடுகளில் உன்னிப்பாக நீங்கள் கவனித்தால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால் அதிக லாபத்தை எதிர்பார்க்காமல் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் செயல்படுவது நல்லது.


உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு உயர்வினை எட்ட முடியும். தற்போது நீங்கள் இருக்கக்கூடிய நிலையே ஒரு நல்ல நிலை என்பதால் பிறர் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்து விட வேண்டாம். இந்த ஆண்டு நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். நெருங்கியவரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சை குறைத்துக் கொண்டு உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது.


குடும்பம்:

கணவன், மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும் நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் 01-05-2024 முடியவும், அதன் பின்பு 4-லும் சஞ்சாரம் செய்வதால் பணவரவில் ஏற்ற, இறக்கமான நிலை தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது தற்போதைக்கு நல்லதல்ல. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது மிக மிக நல்லது. வீடு, மனை வாங்க வேண்டும் என்ற ஆசைகள் உங்களுக்கு இருந்தாலும் தற்போது இருக்கக்கூடிய பொருளாதார நிலை அதற்கு சாதகமாக இருக்காது. முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படி ஒரு இக்கட்டான நிலையில் கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தால் முடிந்தவரை உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது நல்லது.


உடல் ஆரோக்கியம்:

வரும் 2024-ம் ஆண்டில் உங்கள் ராசிக்கு அதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். எதிர்பாராத வீண் செலவுகளை சமாளிக்க மருத்துவ காப்பீடுகள் எடுத்துக் கொள்வது கூட சாலச் சிறந்தது. வீட்டில் வயது மூத்தவர்கள் இருந்தால் அவர்கள் மூலமாக கூட உங்களுக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். மனோ தைரியத்துடன் செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை நீங்கள் சமாளிக்க முடியும்.
SHARE