Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்..!!!

SHARE


சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

வாழ்வில் பலமுறை தோல்வியை சந்தித்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலே மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்கக்கூடிய நபராக இருப்பீர்கள். உங்களுக்கு வரும் 2024-ஆம் ஆண்டில் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான குரு பகவான் வரும் 01-05-2024 முடிய பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் முதல் 4 மாத காலங்கள் உங்களது பொருளாதார நிலையானது மிக மிக சிறப்பாக இருந்து உங்கள் எண்ணங்களை செயல்படுத்தி வெற்றி பெற வாய்ப்பினை உண்டாக்கும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய பலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். இந்த ஆண்டில் நீங்கள் ஏதாவது ஒரு முக்கிய செயல்களை செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தால் அதனை ஆண்டின் தொடக்கத்தில் செய்வது மிக மிக நல்லது. குடும்பத்தில் மங்கலகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு.


தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் மேற்கொள்ள கூடிய செயல்கள் பரிபூரண வெற்றியை தந்து மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலமாக நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். வரும் 01-05-2024-க்கு பிறகு பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குரு மாற்றத்திற்குப் பிறகு பொருளாதார நிலையில் சற்று ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக வரும் நாட்களில் செலவு செய்ய நேரிடும். குரு மாற்றத்திற்கு பிறகு தொழில், வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டால் மட்டும் தான் நல்ல நிலையினை எட்ட முடியும்.


உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து கௌரவமான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மனைவி பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். பூர்வீக சொத்து வகையில் ஒரு சில ஆதாயங்களை பெறுவீர்கள்.


குடும்பம்:

குடும்பத்தில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்களால் தேவையற்ற நிம்மதி குறைவுகளை எதிர் கொள்ளக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு செயலிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. நீங்கள் எதிலும் திறமையோடு செயல்படுவீர்கள் என்றாலும் தேவையற்ற வகையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் உங்கள் மன அமைதியை குறைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமும் பயணங்களாலும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.


உடல் ஆரோக்கியம்:

உங்கள் ராசிக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி 7-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், சர்ப்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது உங்கள் ராசிக்கு 2-லும், ராகு உங்கள் ராசிக்கு 8-லும் சஞ்சாரம் செய்வதாலும் நீங்கள் உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிக மிக நல்லது. அஜீரண கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் முடிந்த வரை பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது பொறுமையை கடைப்பிடிப்பதும், சட்ட விதிக்கு உட்பட்டு நடப்பதும் வீண் பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.
SHARE