2024 புத்தாண்டு ராசிபலன் - விருச்சிகம்..!!!
விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )
பார்ப்பதற்கு வெகுளி போல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலே எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய சுபாவம் கொண்டவர்களாக இருப்பீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு தனித் திறமையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு வரும் 2024-ம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடக்க இருப்பதால் சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதம் ஆகும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்து வகையில் தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் பேச்சில் சற்று பொறுமையோடு நிதானத்தோடு இருப்பது மிக மிக நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பங்காளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சில நெருக்கடி இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் மே மாதத்துக்கு பிறகு நல்ல முன்னேற்றமும் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய யோகமும் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கூட்டாளிகள் மூலமாக ஆதாயங்கள் கிடைத்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு.
உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பனிச்சுமை இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை பெறுவீர்கள். சக ஊழியர்கள் சில இடையூறுகளை உங்களுக்கு ஏற்படுத்தினாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அதிக வேலைப்பளு காரணமாக அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெற முடியும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து ஆண்டின் பிற்பாதியில் ஒரு கௌரவ நிலையினை எட்டக்கூடிய யோகமானது உண்டு.
குடும்பம்:
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு இவ்வாண்டில் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் வரும் 01-05-2024 முடிய சஞ்சாரம் செய்வதால் 2024-ம் ஆண்டில் முதல் நான்கு மாத காலங்கள் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் என்பதால் நீங்கள் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு சூழலுக்கு தகுந்தவாறு நிலைமையை சமாளித்து விட்டால் நீங்கள் ஒரு உயர்வான நிலையினை எட்ட முடியும். முதல் 4 மாத காலங்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால் அதன் பிறகு இருக்கக்கூடிய ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம்:
சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு உங்கள் ராசிக்கு 5-லும், கேது 11-லும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிக மிக நல்லது. இயற்கை உணவுகளை உட்கொள்வதன் மூலமாக ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும்.
வரும் 01-05-2024 முதல் பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அனுகூலமாக சஞ்சாரம் செய்கின்ற பொழுது எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்கள் ஏற்படும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். மங்கலகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும்.