Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - மீனம்..!!!

SHARE


மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )


கம்பீரமான தோற்றமும், பிறரை வசீகரிக்கக்கூடிய அழகான உடல் அமைப்பும் கொண்ட மீன ராசி நேயர்களே! குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு கொண்டவர்களாக இருப்பீர்கள். வரும் 2024-ம் ஆண்டில் பொன்னவன் என போற்றப்படக்கூடிய ராசியாதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ம் வீட்டில் 01-05-2024 முடிய சஞ்சாரம் செய்கின்ற காரணத்தால் வரும் ஆண்டில் முதல் நான்கு மாத காலங்கள் உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மங்கலகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் எண்ணங்களை முதல் நான்கு மாதத்தில் செயல்படுத்தினால் அதற்கு முழுமையான வெற்றியினை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ஏழரைச்சனியில் விரைய சனி நடந்து வருகிறது. இதன் காரணமாக தேவையில்லாத வகையில் வீண் செலவுகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். ஒரு சிலருக்கு தேவையில்லாத வகையில் கடன்கள் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

01-05-2024-க்கு பிறகு குருபகவான் 3-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.


தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சில ஆதாயங்களை பெற்றாலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக நியாப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. குறிப்பாக எதிலும் தனித்து செயல்படாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்தால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும்.


உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் ஒரு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கிறது, மே மாதத்துக்கு பிறகு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும் என்பதால் சூழலுக்கு தக்கவாறு எதிலும் சற்று பொறுமையோடு நடந்து கொள்வது நல்லது. அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாய்ப்புகளை மட்டும் சரிவர பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லக்கூடிய நிலையும், மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒரு இடத்தில் தங்கி பணிபுரியக்கூடிய ஒரு அமைப்புகளும் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் மூலமாக தேவையில்லாத வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் அதிக முதலீடுகள் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது.


குடும்பம்:

குடும்பத்தில் மங்கலகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பிள்ளைகள் வழியில் ஒரு சில மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு ஜென்ம ராசியிலும், கேது ஏழாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. கணவன், மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரம் ஆகும்.


உடல் ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் நிதானத்தோடு இருப்பது உத்தமம். தேவையான மருத்துவ பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவேளையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
SHARE