Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - கடகம்..!!!

SHARE

கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )


விடா முயற்சியுடன் செயல்படும் திறனும், உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட கடக ராசி நேயர்களே! சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலேயே எதிலும் மன தைரியத்துடன் செயல்படக் கூடிய நபராகவும், உங்களின் பேச்சுத் திறமையால் மற்றவர்களை வசீகர படுத்தக்கூடிய திறமை கொண்டவராகவும் இருப்பீர்கள். வரும் 2024-ம் ஆண்டில் சர்ப கிரகம், நிழல் கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதும் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றியினை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் தைரியத்தோடு செயல்பட்டு எதையும் எதிர்கொள்ள கூடிய திறமை உங்களிடம் இருக்கும். நல்ல நட்புகள் உங்களுக்கு கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயங்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

வரும் 2024-ம் ஆண்டில் ஆண்டு கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குரு ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பாக முதல் 4 மாத காலங்கள் 10-ல் சஞ்சாரம் செய்வது பொருளாதார ரீதியாக ஏற்ற, இறக்கமான நிலையினை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். முதல் 4 மாத காலங்கள் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது, கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தை கடைபிடிப்பது மிக மிக நல்லது. எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவதன் மூலமாக தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.

குறிப்பாக ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டு விட்டால் 01-05-2024 முதல் உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குரு லாப ஸ்தானமான 11-ம் வீட்டுக்கு மாறுதலாகி சஞ்சாரம் செய்வதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்படும். பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து அனைத்து விதமான பொருளாதார தேவைகளும் பூர்த்தியாகும்.


தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் தொடக்கத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் மே மாதம் முதல் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் ஆர்டர்களில் கவனத்துடன் செயல்பட்டால் போட்ட முதலை விட அதிகப்படியான லாபங்களை வரும் நாட்களில் அடைய முடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெற முடியும். குறிப்பாக தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி ஒரு சுமூகமான நிலை ஏற்படும். மனநிறைவோடு தொழிலை செய்ய முடியும்.


உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். பணியில் உங்களுக்கு நிம்மதியும் விரும்பிய பதவி உயர்வும் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்கு தற்போது சன்மானம் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு தந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகுவதால் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.


குடும்பம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு மாற்றத்திற்கு பிறகு திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் மன வருத்தத்தோடு இருக்கும் தம்பதிகளுக்கு இந்தாண்டில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று காத்திருக்கிறது. பெற்றோர்களுடைய ஆசி சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்து வகையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் தற்போது கிடைக்கும். நீண்ட நாட்களாக பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது சுமூகமாக முடிந்து பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து சுகங்கள் கிடைக்கும்.


உடல் ஆரோக்கியம்:

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமான சனி 2024-ம் ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி நடக்கிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, குறிப்பாக இரவு நேர பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. பொதுவாக வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது சட்ட விதிக்குட்பட்டு நடப்பது மிக மிக நல்லது. எதிர்பாராத வகையில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது முடிந்த வரை மருத்துவ காப்பீடுகள் எடுத்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. குறிப்பாக உங்களது உடல் ஆரோக்கியத்திலும், மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் வரும் நாட்களில் முக்கியத்துவம் தருவது மிக மிக சிறப்பு. சிறு பாதிப்பாக இருக்கின்ற பொழுதே அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்க முடியும்.

வரும் 2024-ம் ஆண்டில் முதல் 4 மாதம் சற்று பொறுமையோடு இருந்தால் மே மாதம் முதல் உங்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கக்கூடிய இனிய நாட்களாக இருக்கும்.
SHARE