Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - தனுசு..!!!

SHARE


தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)


எதையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து அறியும் திறமை கொண்ட குருவின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசி நேயர்களே! மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், மற்றவர்களை வழி நடத்துவதிலும் வல்லவராக விளங்க கூடிய உங்களுக்கு வரும் 2024-ம் ஆண்டில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். இதுநாள் வரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வாழ்வில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பண வரவுகள் நன்றாக இருந்து உங்களது கடன் பிரச்சினைகள் எல்லாம் பகவலனை கண்ட பனி போல முழுமையாக விலகும். நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் பைசல் செய்ய முடியும். நீண்ட நாளைய உங்களுடைய எண்ணங்கள் எல்லா வற்றையும் தற்போது நடைமுறைப் படுத்த முடியும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தரக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிக்க சிறு சிறு இடையூறுகள், தாய் வழியில் தேவையற்ற கவலை, வண்டி, வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். கேது 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமும் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகளும் உண்டாகும். உங்களிடம் பகை பாராட்டியவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு நட்புடன் பழகக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பொதுவாக நீங்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால் மிகச் சிறப்பான பலன்களை வரும் நாட்களில் அடைய முடியும்.


தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபமும் தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.


உத்தியோகம்:

வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளும் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை பெறக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும் உண்டாகும்.


குடும்பம்:

ஆண்டு கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குரு இந்த ஆண்டில் முதல் 4 மாத காலங்கள் பஞ்சம ஸ்தானமான 5-ல் தனது நட்பு வீடான செவ்வாயின் வீடான மேஷ ராசியில் இருப்பதால் ஆண்டின் தொடக்கத்திலேயே குடும்பத்தில் மங்கலகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு, மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய யோகம், கடந்த கால இடையூறுகள் எல்லாம் விலகி நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள், தாராள தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்திலே ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி கிடைக்கும். பங்காளி வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி ஒரு சமூக நிலை உண்டாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.


உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த மருத்துவ செலவுகள் எல்லாம் குறைவது மட்டும் இல்லாமல் மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

வரும் 01-05-2024க்கு பிறகு குரு பகவான் 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கொடுக்கல், வாங்கல் ரீதியாக ஒரு ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் சனி சாதகமாக சஞசரிப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும்.
SHARE