Thursday 14 December 2023

எதிர்வரும் 16 திகதி வரை கன மழை தொடரும்..!!!

SHARE


வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே தோன்றியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழையானது எதிர்வரும் 16.12.2023 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அதே வேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் சற்று வேகமான காற்றுடன் கூடிய குளிரான வானிலையும் எதிர்வரும் 16ம் திகதிவரை தொடரும்.

இக்காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் சற்று கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். அதேவேளை கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40கி.மீ. இனை விட அதிகமாக காணப்படும்.

இன்று(14.12.2023) காலை 6. 00 மணி முதல் இரவு 8.20 மணி வரையான காலப்பகுதியில்

1. வவுனிக்குளம் 143 மி.மீ
2. கனகராயன்குளம் 135 மி. மீ.
3. மாங்குளம் 138 மி.மீ. இனையும்

இன்று(14.12.2023) காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

1. பனங்காமம் 130 மி.மீ.
2. கல்விளான் 120 மி.மீ.
3. மல்லாவி 102 மி.மீ.
4. ஐயன்கன்குளம் 101 மி.மீ.
5. இரணைமடு 102.5 மி.மீ.
6. சேமமடு 55 மி.மீ. இனையும் பெற்றுள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ச்சியாகக் கிடைக்கும் மழை காரணமாக வவுனிக்குளம் 1.5 அடிக்கு மேலாக வான் பாய்ந்து வருகின்றது. இது இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இரணைமடு வின் வான்கதவுகள் இன்று பின்னிரவு திறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வடக்கு மாகாணத்தின் பல நீர்நிலைகள் அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அவற்றின் மேலதிக நீரை வெளியேற்றுகின்றன.நிலமும் நீர் நிரம்பு நிலையைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக மழையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பல பகுதிகள் வெள்ள அபாய நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
SHARE