சந்தேகநபரை கைது செய்யச் சென்று ஓடையில் வீழ்ந்த சாவகச்சேரியை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளை காணவில்லை..!!! (Video)
கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்று, ஜா-எலயில் ஓடை ஒன்றில் வீழ்ந்து காணாமற்போன பொலிஸ் கான்ஸ்டபிளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் கடற்படை சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
திருட்டு சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த போது, தப்பிச்செல்வதற்காக ஓடையில் குதித்துள்ளார்.
அவரை பிடிப்பதற்காக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் ஓடையில் குதித்ததாக பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 26 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தப்பிச்செல்வதற்காக ஓடையில் குதித்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.