Saturday, 25 November 2023

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்..!!!

SHARE

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மன்றில் சாட்சியம் அளிக்கும் போது , தன்னையும் ,உயிரிழந்த மற்றைய இளைஞனையும் சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிசாரை அடையாளம் காட்ட முடியும் என கூறி , இருவரின் பெயர்களை கூறி அடையாளம் கூறியதுடன் , ஏனைய மூவர் தொடர்பில் அவர்களின் அங்க அடையாளங்களை கூறி , அடையாளம் கூறி இருந்தார்.

அதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனை அடுத்து , நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு , நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது , அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடைபெறவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அநுராதபுர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதேவேளை நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி வந்தவர்கள் என்பதால் , அவர்களால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் , குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் யாழ்ப்பாண சிறையில் உள்ளமையால் , இவர்களையும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைப்பதனால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் காரணத்தலையே அநுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சாட்சியை அழைத்து சென்று தடயங்களை சேகரிக்க நடவடிக்கை.

இதேவேளை , சம்பவத்தின் மூன்றாவது சாட்சியான , உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனை நீதிமன்ற உத்தரவின் பிராகாரம் , இளைஞர்களை கைது செய்து வைத்திருந்த வேளை அவர்களை பொலிஸார் அழைத்து சென்ற இடங்களுக்கு இன்றைய தினம் பொலிஸார் மீள அழைத்து சென்று விஞ்ஞான ரீதியான ஆய்வுகள், சான்றுகள், தடயங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE