யாழ்.நகரில் வீடுகளுக்குள் அத்துமீறி குளியறையில் இரகசியமாக காணொளி எடுத்து மிரட்டிய நபர் சிக்கினார்..!!!
யாழ்ப்பாணம் மாநகரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியறையில் இரகசியமாக கமரா மூலம் காணொளிகளைப் பதிவு செய்து மிரட்டல் விடுத்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர் நீராவியடி பிள்ளையார் கோவிலை அண்டிய பகுதி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அத்துமீறிய குறித்த நபர் அங்கு குளியலறையில் இரகசிய கமராவைப் பொருத்தி காணொளிப் பதிவை எடுத்துள்ளார். அந்தக் காணொளிப் பதிவுகளை வைத்து வீட்டிலுள்ளவர்களை மிரட்டியுள்ளார்.
அந்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
அவை தொடர்பில் அந்தப் பகுதியில் உள்ள சிசிரிவி கமரா பதிவுகளின் உதவியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரை சிறுவர், பெண்கள் பிரிவினர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
பொலிஸ் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.