யாழ். மாவட்ட வீர, வீராங்கனைகள் பிரகாசிப்பு..!!!
யாழ். மாவட்ட மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களை வௌிப்படுத்த கிடைத்த சிறந்ததோர் களமாக இவ்வருட தேசிய இளையோர் விளையாட்டு விழா அமைந்தது.
20 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் யாழ். மாவட்டத்தின் எஸ்.மிதுன்ராஜ் பரிதிவட்டம் எறிதல் மற்றும் குண்டெரிதல் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை சுவீகரித்தார்.
குண்டெரிதல் போட்டியில் 14.39 மீற்றர் தூரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்திய அவர் இந்தப் போட்டிப் பிரிவில் தனது சிறந்த பெறுபேற்றையும் பதிவுசெய்தார்.
பரிதி வட்டம் எறிதலில் 44.80 மீற்றர் தூரத்திற்கு திறமையை வௌிப்படுத்திய எஸ்.மிதுன்ராஜ் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் 39.06 மீற்றர் தூரத்திற்கு பரிதியை எரிந்த யாழ். மாவட்டத்தின் ஜே.விஷ்ணுப்பிரியனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.
20 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான உயரம் பாய்தல் போட்டியில் ஊர்காவற்றுறையை சேர்ந்த ரூபன் விமல்ராஜ் வினோயன் 1.96 மீற்றர் உயரத்துக்கு பாய்ந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 5000 மீற்றர் வேகநடை போட்டியை 31:32.7 என்ற காலப்பெறுதியில் பூர்த்திசெய்த யாழ். மாவட்டத்தின் ஆர்.கௌசிப்பிரியா வெண்கலப்பதக்கத்தை அடைந்தார்.
இந்த பெறுபேறுகளுக்கு அமைவாக இம்முறை தேசிய இளையோர் விளையாட்டு விழாவில் யாழ். மாவட்டத்துக்கு 3 தங்கம், 2 வெண்கலப்பதக்கங்கள் கிடைத்தன.
34 ஆவது தேசிய இளையோர் விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது.