Sunday 12 November 2023

நூறு வீத வெற்றியுடன் முதல் சுற்றை நிறைவுசெய்தது இந்தியா..!!!

SHARE

தனது சொந்த நாட்டில் நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா முதல் சுற்றை 100 வீத வெற்றியுடன் நிறைவுசெய்தது.

பெங்களூர் எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற 45ஆவதும் கடைசியுமான லீக் போட்டியில் நெதர்லாந்தை நையப்புடைத்த இந்தியா 160 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அரை இறுதியில் இந்தியா விளையாடவுள்ளது.

இந்தியா சார்பாக முன்வரிசை வீரர்கள் ஐவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 410 ஓட்டங்களைக் குவித்தது. இதில் 244 ஓட்டங்கள் பவுண்டறிகளாக பெறப்பட்டது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 71 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஷுப்மான் கில் 32 பந்துகளில் 51 ஓட்டங்களுடனும் அவரை தொடர்ந்து ரோஹித் ஷர்மா 61 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா 55ஆவது அரைச் சதத்தையும் கில் 12ஆவது அரைச் சதத்தையும் பூர்த்திசெய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் ஷ்ரேயாஸ் ஐயரும் 3ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தியபோது விராத் கோஹ்லி 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். விராத் கோஹ்லி குவித்த 71ஆவது சர்வதேச ஒருநாள் அரைச் சதம் இதுவாகும்.

அதன் பின்னர் ஷ்ரேயாஷ் ஐயரும் கே. எல். ராகுலும் ஜோடி சேர்ந்து நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை நையப்புடைத்து இந்திய இரசிகர்களுக்கு பெரு விருந்து படைத்தனர்.

நெதர்லாந்தின் எல்லா பந்து வீச்சாளர்களையும் சுழற்றி அடித்து திக்பிரமிப்பில் ஆழ்த்திய இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 127 பந்துகளில் 208 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் 4ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டமாக இது அமைந்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 128 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.

கடைசி ஓவரில் தனது சதத்தைப் பூர்த்தி செய்து ஆட்டம் இழந்த கே. எல். ராகுல் 64 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 102 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 7ஆவது ஒருநாள் சதமாகும்.

பந்துவீச்சில் பாஸ் டி லீட் 82 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

411 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

நெதர்லாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் வெஸ்லி பரேசி (4) ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை வெறும் 5 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் மெக்ஸ் ஓ'டவ்ட், கொலின் அக்கமன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து நெதர்லாந்துக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 18 பந்துகள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

ஓ'டவ்ட் 30 ஓட்டங்களையும் அக்கமன் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் சைப்ரேண்ட் எங்கள்ப்ரெச், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் மந்தகதியில் துடுப்பெடுத்தாடி விக்கெட்களைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சித்தினர்.

ஆனால், அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஸ்கொட் எட்வேர்ட்ஸின் விக்கெட்டை பகுதிநேர பந்துவீச்சாளர் விராத் கோஹ்லி கைப்பற்றி இணைப்பாட்டத்துக்கு முடிவுகட்டினார்.

இந்தப் போட்டியில் பிரதான பந்துவீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்தாமலிருக்கும் நோக்கில் விராத் கோஹ்லி, ஷுப்மான் கில் ஆகியோரைப் பயன்படுத்திய ரோஹித் ஷர்மா தானும் 5 பந்துகளை வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (17) ஆட்டம் இழந்த பின்னர் எங்க்ள்ப்ரெச்சுடன் ஜோடி சேர்ந்த பாஸ் டி லீட் 5ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுபக்கத்தில் மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடிய எங்க்ள்ப்ரெச் 80 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (172 - 6 விக்.)

இந் நிலையில் டேஜா நிடாமனுரு, லோகன் வென் பீக் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியைத் தாமதிக்கச் செய்தனர்.

லோகன் வென் பீக் 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் புகுந்த ரோலோவ் வென் டேர் மேர்வும் 16 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஏரியன் டட் (5) களம் விட்டகன்றார்.

மத்திய வரிசையில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டேஜா நிடாமனுரு 39 பந்துகளில் 6 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 54 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ரோஹித் ஷர்மாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பகுதிநேர பந்துவீச்சாளர்களான விராத் கோஹ்லி 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ரோஹித் ஷர்மா 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மொஹமத் ஷமி, குல்தீப் யாதவ், ஷுப்மான் கில் ஆகியோரும் பந்துவீசினர்.

இந்தப் போட்டியுடன் லீக் போட்டிகள் யாவும் முடிவுக்கு வந்தது.

ஆட்டநாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்

அரை இறுதிப் போட்டிகள்

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) நடைபெறவுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2ஆவது அரை இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் வியாழக்கிழமை (16) நடைபெறவுள்ளது,
SHARE