காங்கேசன்துறை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தூண்கள் திருட்டு..!!!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடி செல்கின்றனர்.
இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகில் உள்ள துறைமுக அதிகார சபையினருக்கு சொந்தமான காணியில் பெரியளவிலான சீமெந்து தூண்கள் காணப்படுகின்றன. அவை துறைமுக அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதுமட்டுமன்றி இடப்பெயர்விற்கு முன்னரே குறித்த தூண்கள் அருகிலுள்ள ஐயனார் ஆலயத்தினை சுற்றி பாதுகாப்பு மதிலாக காணப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட அப் பிரதேசங்களில் இராணுவத்தினர் நிலை கொண்டு இருந்த நிலையில் , இராணுவத்தினர் தற்போது அங்கிருந்து வெளியேறிய நிலையில் அவ்விடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அந்நிலையில் துறைமுக அதிகார சபையின் காணிக்குள் அத்துமீறி நுழையும் திருடர்கள் அங்கு காணப்படும் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தூண்களை உடைத்து கம்பிகளை களவாடி செல்கின்றனர்.
பெறுமதியான பல தூண்கள் காணப்படும் நிலையில் அவற்றினை இரும்புக்காக உடைத்து சேதப்படுத்தி இரும்புகளை திருடி செல்கின்றனர்.
இது தொடர்பில் ஊரவர்களால் காங்கேசன்துறை பொலிஸார் , வலிகாமம் வடக்கு பிரதேச சபையினருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் பிரதேச கிராம அலுவலர் அலுவலகம் என்பன , இரும்பு திருட்டு நடைபெறும் காணிக்கு அருகில் அமைந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.