Thursday, 30 November 2023

தெற்கில் திருடிய ஆட்டோவை கிளிநொச்சியில் விற்றவர் கைது..!!!

SHARE

தெற்கில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றினை வடக்கில் விற்பனை செய்த தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்களத்தில் முச்சக்கர வண்டி ஒன்றினை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதை அடுத்து திணைக்களத்தால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பதிவுக்கு போலியான புத்தகத்தை வழங்கிய குற்றச்சாட்டில் பளை பகுதியை சேர்ந்த நபரை கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில், தனக்கு கிளிநொச்சியில் வாகன திருத்தகம் (கராஜ்) வைத்திருக்கும் நபரே, முச்சக்கர வண்டியை விற்பனை செய்ததாக கூறியதை அடுத்து, கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது , தனக்கு தென்னிலங்கையை சேர்ந்த நபரே விற்பனை செய்ததாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வாகன அடிச்சட்ட இலக்கத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, குறித்த முச்சக்கர வண்டி, தென்னிலங்கையில் களவாடப்பட்ட முச்சக்கர வண்டி என கண்டறிந்தனர்.

கடந்த 6 மாத கால தொடர் விசாரணைகளின் அடிப்படையில், முச்சக்கர வண்டியை களவாடி, அதற்கு போலியான புத்தகம் மற்றும் இலக்க தகடுகள் தயாரித்து , அதனை கிளிநொச்சியில் விற்பனை செய்த நபரை கண்டறிந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் புதன் கிழமை யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
SHARE