Monday, 20 November 2023

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா 6 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது..!!!

SHARE

அஹமதாபாத் நரேந்தர மோடி விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை சகலதுறைகளிலும் விஞ்சிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களால் வெற்றிபெற்று 6ஆவது தடவையாக உலக சம்பியனாகி வரலாறு படைத்தது.

ட்ரவிஸ் ஹெட் குவித்த அபார சதம், மானுஸ் லபுஷேனுடன் அவர் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பெட் கமின்ஸ் பந்துவீச்சில் கையாண்ட சிறந்த வியூகம், துல்லியமான பந்துவீச்சுகள் மற்றும் அசாத்திய திறமைகொண்ட களத்தடுப்பு என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இதேவேளை, இந்த வருட மத்தியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா சம்பியனாகி இருந்தது. இதன் மூலம் ஒரே வருடத்தில் ஒரே தலைமையின்கீழ் (பெட் கமின்ஸ்) இரண்டு சம்பியன் பட்டங்களை வென்ற முதலாவது நாடு என்ற மற்றொரு வரலாற்றுச் சாதனையை அவுஸ்திரேலியா நிலைநாட்டியது.

மேலும் சொந்த நாட்டில் நடைபெற்றுவந்த 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அரை இறுதிவரை தொடர்ச்சியாக 10 போட்டிகளில் அபார வெற்றிகளை ஈட்டிவந்த இந்தியா, 130,000 பார்வையாளர்கள் முன்னிலையில் அழுத்தத்துக்கு மத்தியில் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது.

அலன் போர்டர், ஸ்டீவ் வோ, ரிக்கி பொன்டிங் (2 தடவைகள்), மைக்கல் க்ளார்க் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது அவுஸ்திரேலியாவை பெட் கமின்ஸ் உலக சம்பியனாக வழிநடத்தியுள்ளார்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி உலக சம்பியனானது.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெத்தாடியபோது அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

டேவிட் வோர்னர் (7), மிச்செல் மார்ஷ் (27), ஸ்டீவன் ஸ்மித் (15) ஆகிய மூவரும் வேகமாக ஓட்டங்களைப் பெற முயற்சித்து விரைவாகவே ஆட்டம் இழந்தனர். (47 - 3 விக்.)

எனினும் ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 192 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

உலகக் கிண்ண இறுதி ஆட்ட வரலாற்றில் இந்த இணைப்பாட்டம் அதிசிறந்த இணைப்பாட்டமாக பதிவானது.

இலங்கைக்கு எதிராக 2007 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கிறிஸ் கில்கிறைஸ்ட், மெத்யூ ஹேடன் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 172 ஓட்டங்களே இதற்கு முன்னர் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. அவுஸ்திரேலியர்களால் நிலைநாட்டப்பட்ட அந்த சாதனை அவுஸ்திரேலியர்களாலேயே முறியடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

120 பந்துகளை எதிர்கொண்ட ட்ரவிஸ் ஹெட் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்திய வீரர்கள் மொத்தமாக 13 பவுண்டறிகளையும் 3 சிக்ஸ்களையும் மாத்திரமே பெற்றிருந்தனர்.

ட்ரவிஸ் ஹெட்டுக்கு பக்கபலமாக மிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய மானுஸ் லபுஷேன் 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 47 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மொஹமத் சிராஜ் 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக, அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து சுமாரான மொத்த எண்ணிக்கையான 240 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியா சார்பாக ரோஹித் ஷர்மா (47), விராத் கோஹ்லி (54), கே.எல். ராகுல் (66) ஆகிய மூவரே 45 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அவர்களில் ரோஹித் ஷர்மா மாத்திரமே வேகமாக ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அவர் மாத்திரமே 3 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.

விராத் கோஹ்லியும் ராகுலும் 4ஆவது விக்கெட்டில் 109 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இல்லாவிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகியிருக்கும்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியிலும் ஆட்டநாயகனான ட்ரவிஸ் ஹெட், சந்தேகத்திற்கிடமின்றி இறுதிப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தெரிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் 11 போட்டிகளில் 3 சதங்கள், 6 அரைச் சதங்களுடன் 765 ஓட்டங்களை மொத்தமாக பெற்று உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான விராத் கோஹ்லிதொடர் நாயகன் விருதை வென்றெடுத்தார்.

உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணிக்கு இந்திய பிரதமர் நரேந்த்ர மோடி உலகக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். அவுஸ்திரேலிய உதவிப் பிரதமர் றிச்சர்ட் மால்ஸும் பிரசன்னமாகியிருந்தார்.
SHARE