2024 வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என்னென்ன நன்மைகள்..!!!
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் உள்ளது எனபதை இந்த பதிவில் பார்க்கலாம்.வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்களுக்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக கூறினார்.
மேலும் நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது என்றும் யாழ்ப்பாணத்தில் நிலவும் நன்னீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.அதன்படி அதன் அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேநேரம் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கி புதிய முதலீட்டு வலயம் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய , கண்டி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வடக்கு கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.அதேவேளை மாகாண கடற்றொழில் சபைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன என்றும் அரச மற்றும் தனியார் துறை சார்ந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க 1500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் இதற்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை மேற்கொள்ளவும் அதற்காக அரச காணிகளில் 300 ஏக்கர் ஒதுக்கவும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
மீன்பிடித்துறை மேம்பாட்டிற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.பால்பண்ணையாளர்களுக்கு விசேட கடன் திட்டங்கள் வழங்கப்படும் என்றும் கட்டிட நிர்மாணத்துறைக்கு விசேட திட்டங்களும் அவர்களுக்கு அரச காணிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
துறைமுகங்களை அபிவிருத்தி செய்யவும் அதில் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம் என்றும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையும் இதற்கு ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் இதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்பதனால் இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் என கூறினார்.