க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை தரம் 10 இல்..!!!
பதினோராம் தரத்தில் தற்போது நடத்தப்படும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி கற்பதற்கான வயதைக் கருத்திற்கொண்டு அவர்கள் 15 வயதாகும் போது கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் 4 வயது நிறைவடைந்த சிறார்கள் ஆரம்ப பாடசாலை செல்வது கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, மொகமட் முஸம்மில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலவச ஆரம்பக் கல்வியைத் தொடங்குவதற்கு நாம் உத்தேசித்துள்ளோம். அந்த வகையில் நான்கு வயதை நிறைவு செய்யும் சிறார்கள் கண்டிப்பாக ஆரம்ப பாடசாலை செல்வது அவசியம். நாட்டில் 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட நான்காயிரம் பாடசாலைகள் உள்ளன. 100 மாணவர்களுக்கு குறைந்த 2900 பாடசாலைகள் காணப்படுகின்றன.
அதனால் மிக இலகுவாக கிராமிய மட்டத்தில் இலவசமாக ஆரம்ப பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் இடமளிக்க முடியும். அதற்கான வேலைத் திட்டம் ஒன்றை தேசிய கல்வி நிறுவனம் தயாரித்துள்ளது.
அதனை அறிமுகப்படுத்துவதோடு சாதாரண தர பரீட்சையை பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
நான்காம் ஆண்டிலிருந்து மாணவர் ஒருவர் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுக்கும் போது 15 ஆவது வயதில் அவர் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற முடியும். அத்துடன் 17 வயதில் கல்வி பொதுத் தராத உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் , அது சம்பந்தமான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றார்.