Tuesday, 31 October 2023

வைத்தியசாலைகளில் நோயாளிகள் சிக்கித் தவிப்பு..!!!

SHARE

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காஸாவின் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சிக்கித் தவிப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.|

காஸா பகுதியிலுள்ள அல்-குத்ஸ் வைத்தியசாலைக்கருகிலுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (30) பலத்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

அத்துடன் அல்-குத்ஸ் வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு, அந்த மருத்துவமனை ஊழியர்களை இஸ்ரேல் படையினர் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளதால், அவர்களை நகர்த்தக் கூட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் அப்பகுதியில் தொடர்ந்தும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் சுமார் 14,000 பேர் வைத்தியசாலை மற்றும் அதன் மைதானத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமாகிய இஸ்ரேலின் எதிர்த்தாக்குதல்களால் காஸா மற்றும் மேற்குக் கரையில் 3,360 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள இராணுவ மோதல்கள் காரணமாக, கடந்த ஆண்டில் உயிரிழந்த மொத்த சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் காஸாவில் மூன்று வார காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனிடையே, காஸாவிற்கான மனிதாபிமான உதவிகளுக்கு தடை விதிப்பது குற்றம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE