பௌத்த மதகுருவையும் பெண்களையும் தாக்கிய 8 பேர் கைது..!!!
பௌத்தமதகுரு ஒருவரும் பெண்கள் இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைதுசெய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் பொலிஸாருக்கு உத்தரவிட்டதற்கமையவே இந்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல் மேற்கொண்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். குறித்த மூவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்களை
கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.
உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.