Wednesday, 31 May 2023

வவுனியாவில் குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பு 10 பேர் கைது..!!!

SHARE


வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5,000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25,000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் வவுனியாவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வவுனியா பொலிஸார், தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக இரவில் ஒன்று கூடி நின்றோர் என சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
SHARE