Thursday, 3 February 2022

மீனவர்கள் போராட்டத்திற்கு நீதிமன்று தடை..!!!

SHARE

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக பருத்தித்துறை மீனவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு கட்டளை வழங்கியுள்ளது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீனவர்களுடன் நடத்திய பேச்சு முடிவின்றி நிறைவடைந்த நிலையில் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் அனுமதியளித்து கட்டளை வழங்கியது.

கடந்த வாரம் வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்களின் வலைகளையும் அறுத்து நாசப்படுத்தினர்.

அத்துடன், கடலுக்கு தொழிலுக்குச் சென்ற வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் சடலமாக கரை ஒதுங்கினர்.

இந்தச் சம்பவங்களை அடுத்து பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று பல பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் கல்விக்கு இடையூறு, போக்குவரத்துக்குத் தடை என்பவற்றைச் சுட்டிக்காட்டி பொதுத் தொல்லையின் கீழ் பொலிஸார் செய்த விண்ணப்பத்துக்கு அமைய போராட்டத்துக்கு தடை உத்தரவு வழங்கி இன்று மாலை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
SHARE