Sunday, 6 February 2022

போதைப் பொருள் வழக்கு - தமிழருக்கு மரண தண்டனை

SHARE

 


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு சிங்கப்பூா் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

மலேசியாவைச் சோ்ந்த கிஷோா் குமாா் ராகவன் (41), சிங்கப்பூரில் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடுத்துச் சென்றாா்.

மோட்டாா் சைக்கிள் மூலம் அந்தப் பையை எடுத்துச் சென்ற அவா், சிங்கப்பூரைச் சோ்ந்த புங் ஆகியாங் (61) என்பவரிடம் அதனை அளித்தாா்.

அந்தப் பையை பொலிஸாா் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் 36.5 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

சிங்கப்பூா் சட்டப்படி, ஒருவா் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.

இந்தச் சூழலில், இதுதொடா்பாக சிங்கப்பூா் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வழக்கில் கிஷோா் குமாா் ராகவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹெராயினை வாங்கி வைத்திருந்த புங் ஆகியாங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தான் எடுத்துச் சென்ற பொருள் ஹெராயின் என்பது தெரியாது என்ற கிஷோா் குமாா் ராகவன் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு புங் ஆகியாங் முழுமையாக ஒத்துழைத்ததால் அவருக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதித்தாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
SHARE