பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நோயாளர் காவு வண்டியின் சாரதி மற்றும் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொள்ள வந்த சந்தேகநபர்கள் இருவரில் ஒருவரையும் ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க பாணந்துறை பதில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நேற்று (03) இரவு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மற்றைய சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி களுத்துறை வடக்கில் வசிக்கும் நோயாளர் காவு வண்டியின் சாரதி மற்றும் பாணந்துறை மலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் மோட்டார் சைக்கிளை செலுத்திய வந்த ஓட்டுனர் ஆகியோருக்கு இவ்வாறு தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.