நாட்டில் 99 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளது..!!!
நாட்டில் தற்போது 99 சதவீதம் ஒமிக்ரோன் பரவலே காணப்படுகிறது. இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 42 சதவீதமனோர் மாத்திரமே இதுவரையில் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் இதுவரையில் 59 இலட்சத்து 42 ஆயிரத்து 255 பேர் மாத்திரமே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இது 16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 42 சதவீதமாகும்.
எனினும் 60 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் பதிவாகும் மரணங்களில் 70 சதவீதமானவை 60 வயதுக்கு மேற்பட்டோருடையதாகும். எனவே 60 வயதுக்கு மேற்பட்டோர் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.
எனினும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 40 சதவீதமானோர் இன்னும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாகக் காணப்பட்டது. பின்னர் 10 நாட்களாகக் குறைக்கப்பட்டு, தற்போது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. காரணம் தற்போது நாட்டில் 99 சதவீதம் ஒமிக்ரோன் பரவலே காணப்படுகிறது. ஒமிக்ரோன் வைரஸானது விரைவாக தொற்றி, விரைவாக குணமடையக் கூடியதாகும்.
ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகி 5 நாட்களின் பின்னர் தொற்றாளரிடமிருந்து அது மீள பரவாது. எனவே தான் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் போதுமானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வித தொற்று அறிகுறிகளும் இல்லையெனில் 7 நாட்களின் பின்னர் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்கத் தேவையில்லை என்றார்.