Friday, 11 February 2022

சூரிய புயலில் சிக்கி 40 கோள்கள் வளிமண்டலத்தில் எரிந்தன

SHARE


அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியிருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவி வட்டப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன.

இது தொடா்பாக ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்ததாவது:

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூரிய புயல், வளிமண்டலத்தை அடா்த்தியாக்கியது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் (ஒரு செயற்கைக் கோளின் எடை 260 கிலோ) 40 செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன.

சில செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையிலிருந்து விலகும் தறுவாயில் உள்ளன. இந்த விபத்தைத் தவிா்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. இந்த சம்பவத்தால் புவி வட்டப் பாதையிலோ, பூமியிலோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமாா் 2,000 ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின் மூலம் உலகின் தொலைதூர இடங்களுக்கு இணையவழி சேவை கிடைத்து வருகிறது. இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றி வருகின்றன என்று தெரிவித்துள்ளது.
SHARE