Thursday, 10 February 2022

40 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு

SHARE

 


உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது.


இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,646,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் அந்த நோயால் சா்வதேச அளவில் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 400,986,661 ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 2,962 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,785,438 ஆக உயா்ந்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கடந்த வாரம் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட 17 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி 31 ஆம் திகதி முதல் பிப்ரவரி 6 ஆம் திகதி வரையிலான வாரத்தில் மட்டும் சா்வதேச அளவில் 1.9 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய வாரத்தைவிட 17 சதவீதம் குறைவாகும்.

இதுதவிர, கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. இது, முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE