Friday, 4 February 2022

21 இலட்சத்து 87ஆயிரத்து 555 ரூபாய் பணம் கசிப்பு என்பன சுன்னாக பொலிஸாரினால் மீட்பு - இருவர் கைது..!!!

SHARE

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸாரினால் 21 இலட்சத்து 87 ஆயிரத்து 555 ரூபாய் பணம் , 80 லீட்டர் கசிப்பு மற்றும் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் , கடந்த முதலாம் திகதி இரவு ஏழாலை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றினை சுற்றி வளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வேளை இரவு நேரம் குறித்த பாழடைந்த வீட்டிற்கு வந்த 24, 25 வயதான இரு இளைஞர்களை கைது செய்தனர். அத்துடன் வீட்டினுள் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

அதன் போது வீட்டில் இருந்து 80 லீட்டர் கசிப்பு மற்றும் ஒரு தொகை கோடா என்பவற்றையும் கைப்பற்றினர்.

அதேவேளை குறித்த பாழடைந்த வீட்டினை சுற்றி காணப்பட்ட பற்றைக்காடுகளையும் பொலிஸார் சோதனையிட்ட போது , பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 21 இலட்சத்து 87ஆயிரத்து 555 ரூபாய் பணத்தினையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடந்த 2ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்தமை , கசிப்பு மற்றும் கோடா ஆகியவற்றை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் இருவரையும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர். அத்துடன் கசிப்பு , கோடா மற்றும் பணம் ஆகியவற்றை சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைத்தனர்.

அதனை அடுத்து நீதவான் இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.



SHARE