Saturday, 12 February 2022

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி..!!!

SHARE

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதன் முதல் போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பென் மக்டிரமென்ட் 53 ஓட்டங்களையும் மார்க்கஸ் ஸ்டெய்னிஸ் 30 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணிசார்பில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையம் சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த சாதிர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், 20 ஓவர்களில் 150 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆடிவந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு வெற்றி இலக்காக 143 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

எனினும், இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியதால் 19 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை அணியால் பெறமுடிந்த நிலையில் 20 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணிசார்பில் அதிகபடியாக, பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 12 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி 5 போட்கள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் 1 - 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

இப்போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் அடம் ஷம்பா தெரிவு செய்யப்பட்டார்.
SHARE