முகக்கவசங்களுக்காக 18 000 கோடிக்கும் அதிக தொகை செலவு..!!!
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இலங்கை மக்கள் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் முகக்கவச கொள்வனவிற்காக 18,000 கோடிக்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில் அதனை ஈடுசெய்ய முடியாது நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் முகக்கவச கொள்வனவிற்காக நாட்டு மக்கள் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் முகக்கவசங்களின் விலைகளை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பாடசாலை செல்லும் குடும்பத்தில் அன்றாடம் முகக்கவசத்திற்கான செலவு அதிகரித்துள்ளது. நாட்டிலும் முகக்கவசங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் அதிகபடியான விலைகளில் இவை விற்கப்படுவதாக சுட்டிக்காட்டிள்ளார்.
நாட்டில் பேரூந்து கட்டணங்கள் மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்த நிலையில் தினமும் நாளொன்றுக்கான முகக்கவசம் கொள்வனவு செய்வதற்கு வறிய நிலை மக்களுக்கு முடியாது உள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரையில் பேசாமல் மௌனமாக இருப்பதாகவும் உயர் அதிகாரி தெரிவித்தார்.