Saturday, 12 June 2021

கொவிட் ஆபத்தினால் வெளிநாடுகளுக்கு தப்பிக்கும் இலங்கையர்கள் – 61 பேர் தமிழகத்தில் கைது..!!!

SHARE


தமிழக கடல் மார்க்கமாக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 61 இலங்கையர்களை, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திற்குள் ஊடுருவி, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளிலுள்ள தமது உறவினர்களை தேடி, இலங்கையர்கள் செல்ல முயற்சித்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

இதன்படி, கனடா, லண்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலுள்ள தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழும் நோக்குடன் தாம் இவ்வாறு பயணித்துள்ளதாக, கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், விமான நிலையங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையினாலேயே, தாம் கடல் மார்க்கமாக செல்ல முயற்சித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதன்படி, புத்தளம் – சிலாவத்துறை கடலிலிருந்து இந்த கடந்த 27ம் திகதி இவர்கள் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 24 ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு குழந்தையுமான 27 பேர் உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேகநபர்கள் இலங்கையிலிருந்து தூத்துக்குடி வழியாக மதுரைக்கு சென்று, அங்கிருந்து கேரளா வழியாக கனடா நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளதாக க்யூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இலங்கையர்கள் மதுரையில் தங்கியிருந்த நிலையில், இராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிஸார் இணைந்து, இவர்களை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கனடா செல்லும் நோக்குடன் மங்களுர் சென்ற 34 இலங்கையர்களையும் அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, விசாரணைகளை தொடர அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SHARE