அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் உள்ள பல பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.
அதாவது குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இரணுவம் மற்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த செயற்பாட்டால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது அதிகாலை வேளைகளில் திடீரென வீட்டிற்குள் இராணுவத்தினர் நுழைவதாகவும் அதனால் அங்கு பெண்கள் சிறுமிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாவகவும் தெரிவிக்கின்றனர்.
சில வீடுகளில் நித்திரையில் இருக்கும் போது கூட நுழைவதாகவும் தெரிவிக்கின்றன.
மேலும் வீடுகளுக்குள் சப்பாத்துக்கால்களுடன் நுழைவதும் தீவிரவாதிகளை தேடுவதுபோல் நடந்துகொள்வதும் தமக்கு சங்கடங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அரசு ஒரு பக்கமாக அறிவித்து வரும் நிலையில் இந்த தேடுதல் சோதனை நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குற்றச்செயல்களை கட்டுப்படுவதற்கும் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கும் ரௌடிகளை கைது செய்வதற்கும் வேறு வகையான ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் - ஒட்டுமொத்தமாக எல்லா வீடுகளுக்குள்ளும் சோதனை என்ற பெயரில் உள்நுழைவது சங்கடமாகவும் தொந்தரவாகவும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொதுவெளியில் தாம் கருத்துக்களை சொல்ல பயப்பிடுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள், மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறான அசௌகரிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு வழி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மானிப்பாய், சுன்னாகம், வட்டுக்கோட்டை , உட்பட பல பகுதிகளில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளது - நேற்றும் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.