Tuesday 1 September 2020

முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் " பிரணாப் முகர்ஜி " காலமானார்...!!!

SHARE
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 31) மாலை காலமானார். அவருக்கு வயது 84. இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதி செய்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10 ஆம் தேதி (ஆகஸ்ட் 10) அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல நாட்கள் கோமா நிலையில் இருந்த பிரணாப் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012 -2017 ஆம் ஆண்டு வரை, நாட்டின் 13 ஆவது குடியரசுத் தலைவராகவும் பிரணாப் முகர்ஜி பதவி வகித்துள்ளார். பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகாலம் அயராது பணியாற்றிய பிரணாப்பை கௌரவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.



SHARE