யாழில். நேற்று இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் கைவசம் வைத்திருந்தவர்கள் உட்பட 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சுற்றிவளைப்பு யாழ். நவாலி வீதி, பொம்மைவெளி பகுதியில் நேற்று (01) அதிகாலை 4.30 மணிமுதல் காலை 9 மணிவரை மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற குறித்த சுற்றிவளைப்பின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேரும், யானைப்பல் கைவசம் வைத்திருந்த 2 பேரும், வாளுடன் ஒருவரும், கஞ்சா வைத்திருந்த 2 பேரும், ஹெரோயின் கைவசம் வைத்திருந்த 4 பேரும், சந்தேக நபர்கள் 7 பேருமாக மொத்தமாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது ஹெரோயின், கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 160 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 162 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டனர்