Monday, 24 August 2020

என்னை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம் : நித்யானந்தா ..!!!

SHARE


பாலியல் வழக்கு, கடத்தல், கொலை வழக்கு என பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று, ஒரு நாட்டையே உருவாக்கி அதற்கு ரிசர்வ் வங்கி அமைத்துள்ளதாகவும், விரைவில் நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்றும் கூறி வருகிறார்.

கைலாசா இந்துக்களின் எல்லையற்ற நாடு என்று தான் வெளியிட்ட வீடியோவில் கூறும் நித்யானந்தா, கைலாஷியன் டாலர்கள்' என்று குறிப்பிடப்படும் குறைந்தது எட்டு வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட 77 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார். அரசுத் துறைகள் பல்கலைக் கழகங்கள், சுகாதார நிலையம் அமைத்தல் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நேபாளம், இலங்கை போன்ற 56 இந்து நாடுகளில் வர்த்தகம் செய்ய இருப்பதாகவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கேட்டு மதுரை டெம்பிள் சிட்டி நிறுவனர் குமார் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதி வெளியிட்டார். இது குறித்து தனது வீடியோவில் பேசியுள்ள நித்யானந்தா, மதுரை ஹோட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடை அதிபர் ஆகியோர் தங்களது தொழில்களை கைலாசாவில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு கைலாசாவின் வணிக செயல்பாடுகளில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நான் இறந்தபிறகு எனது சொத்தை மதுரை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஊர்களுக்கு உயில் எழுதி வைத்துள்ளேன்.

திருவண்ணாமலை மலைஅடி வாரத்தில் பல இடங்களில் சிசிடிவி வைத்து தரிசனம் செய்து வருகிறேன், ஆனால் அந்த சிசிடிவி சிக்னலை வைத்து என்னைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் அது இயலாது. கைலாசாவுக்கு அங்கீகாரம் கிடைத்ததும் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கி குற்றவாளியாகக் கருதப்படும் நபர் ஒரு நாட்டையே உருவாக்கி தினசரி சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தால் அவரை ஏன் கைது செய்ய முடியவில்லை? குறிப்பாக அவர் எங்கிருக்கிறார் என்பதையே கண்டுபிடிக்க முடியாதது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
SHARE