யாழ். மாநகரில் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை விற்பனை செய்யும் முகவர் மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போதைப்பொருள் விநியோகிக்கும் இருவர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த புலேந்திரன் கௌரிகரன் அல்லது வசந்தன் என்ற ஹெரோயின் போதைப்பொருள் முகவரிடமிருந்து 56 கிராம் 968 மில்லிக்கிராம் போதைப்பொருளும் செல்லவில் வீதி கொக்குவிலைச் சேர்ந்த புலேந்திரன் மனோஜ் 9 கிராம் 656 மில்லிக்கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவருக்கும் வெவ்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்த யாழ்ப்பாணம் பொலிஸார், அவர்கள் இருவரும் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
வழக்கை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
அத்துடன், ஏனைய இருவரையும் வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.