கொவிட்–19 பெருந்தொற்று தொடர்ந்து பரவி வருகின்றபோதும், தென் கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு மத்தியதரைப் பிராந்தியங்கள் தவிர்த்து உலகெங்கும் நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் உயிரிழப்பு குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தொற்றுநோயின் புதிய விபரங்களை உலக சுகாதார அமைப்பு கடந்த திங்கட்கிழமை இரவு வெளியிட்டது. அதில் கடந்த ஒரு வாரத்தில் உலகெங்கும் பதிவான நோய்த் தொற்று சம்பவங்களில் பாதி எண்ணிக்கை மற்றும் 39,240 உயிரிழப்புகளில் 62 வீதம் என அமெரிக்காஸ் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியமாக உள்ளது.
உலகில் நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 23.65 மில்லியனுக்கு மேல் அதிகரித்திருப்பதோடு 811,895 பேர் உயிரிழந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி முடிவுற்ற வார இறுதியில் உலக சுகாதார அமைப்புக்கு 1.7 மில்லியனுக்கும் அதிகமான கொவிட்–19 தொற்று சம்பவங்கள் மற்றும் 39,000 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இது நோய்த் தொற்று எண்ணிக்கையில் 4 வீத வீழ்ச்சி என்பதோடு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பிலும் வீழ்ச்சி (12 வீதம்) ஏற்பட்டுள்ளது” என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியமான தென்கிழக்கு ஆசியாவில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் 27 வீதமாக அதிகரித்திருப்பதோடு உயிரிழப்பும் 15 வீதம் உயர்ந்துள்ளது. இந்தியா தற்போது அதிகம் நோய்ப் பரவல் கொண்ட நாடாக இருப்பதோடு நேபாளத்திலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
அதேபோன்று கிழக்கு மத்தியதரைப் பிராந்தியத்திலும் வைரஸ் பரவல் 4 வீதம் அதிகரித்தபோதும் கடந்த ஆறு வாரங்களில் உயிரிழப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுள்ளது.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் லெபனான், துனீசியா மற்றும் ஜோர்தானில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆபிரிக்க பிராந்தியத்தில் கடந்த வாரத்தில் நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு முறையே 8 மற்றும் 11 வீதமாக குறைந்துள்ளது. அல்ஜீரியா, கென்யா, கானா, செனகல் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் நோய்ப் பரவல் குறைவடைந்ததே இதற்குக் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
“கடந்த மூன்று வாரங்களில் ஐரோப்பிய பிராந்தியத்தில் நோய்த் தொற்று சம்பவங்கள் நிலையாக அதிகரித்துள்ளன” என்று அது குறிப்பிட்டது.
“எவ்வாறாயினும், அண்மைய வாரங்களில் அதில் ஒரு வீதமாக சற்று குறைவடைந்து, பிராந்தியத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.