முல்லைத்தீவு முள்ளியவளை பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசாரது கடமைக்கு இடையூறாக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு அரச உத்தியோகத்தர்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் வீதியால் சென்றவர்களை மறித்த போது அவர்கள் சோதனை சாவடியில் நிக்காமல் சென்றுவிட்டு சற்று தள்ளி சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
பொலிசார் வாகன காப்புறுதி,மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவற்றை சோதனை செய்தபோது இருவரும் கணவன் மனைவி என தெரிவித்து மனைவி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியம் கிராம அலுவலகர் என்றும், கணவன் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியம் அரச உத்தியோகத்தர் என்று கூறி பொலிசாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் நடத்தையை காணொளியாக பதிவு செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் கையடக்க தொலைபேசியினை கணவன் தட்டி பறிக்க முற்பட்டபோது பொலிசாரின் சீருடையில் இருந்த பெயர் (அரசமுத்திரை) கழன்று வீழந்துள்ளது.
இதனையடுத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்ததோடு வழக்கு விசாரணையை ஐப்பசி மாதம் 8 ஆம் திகதிக்கு தவணையிட்டு நீதவான் உத்தரவிட்டார்.