கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இன்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வசந்த் அன்ட் கோ-வின் நிறுவனரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமானவர் வசந்தகுமார். தமிழகம் முழுவதும் பிரபல தொழிலதிபராக அறியப்பட்டவர். ஆகஸ்ட் 10ஆம் தேதி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை முதலே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நுரையீரலில் சளி அதிகமாகி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், வயது மூப்பு, நீரழிவு நோய் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணங்களாலும் ஐசியுவுக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவரது உடலைச் சுகாதார வழிமுறைகளுடன் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனாவால் உயிரிழந்த முதல் எம்.பி. வசந்தகுமார் ஆவார். வசந்தகுமாரின் இழப்பு தற்போது அவரது சகோதரரான குமரி ஆனந்தனின் குடும்பத்தினரையும், காங்கிரஸ் கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.