இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அதிகூடிய விலை கொண்ட மருத்துப்பொருட்களை அடுத்துவரும் 18 மாதங்களில் உள்நாட்டில் உற்பத்தி செய்வதே எமது இலக்கு என்று மருந்துப்பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன தெரிவித்தார்.
அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் பணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக விஜயம் செய்த அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எமக்கு வழங்கியுள்ள பொறுப்பானது ஐந்து வருடங்களுக்குள் நாட்டுக்கு தேவையான மருந்து பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதாகும். இது தொடர்பில் நாட்டில் பணியாற்றும் பிரதான நிறுவனமாக அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனம் விளங்குகின்றது. அதனால் அடுத்துவரும் 18 மாதங்களுக்குள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் விலை கூடிய மருந்துப் பொருட்களை இந்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. இது தொடர்பில் புதிய தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கும் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான சில மருந்துகளை இங்கு உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளேன். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் காரணங்களால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.
ஆனால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அதிகூடிய விலை கொண்ட மருத்துப் பொருட்களை அரசாங்க மருந்துபொருள் உற்பத்தி தொழிற்சாலைகளில் அடுத்துவரும் 18 மாதங்களில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்களில் சுமார் 20 வீதமானவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை 60 - 75 வீதம் வரை அதிகரிக்கப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக நாட்டுக்கு தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யவென செலவாகும் பெருந்தொகை அந்நியச் செலாவணியை மீதப்படுத்த முடியும். அத்தோடு உயர்தரத்தினாலான மருந்துப்பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடிவதோடு நாட்டில் புதிய தொழில்வாய்ப்புக்களும் உருவாகும்.
இவ்வைபவத்தில் மருந்துப்பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் உத்பல இந்திரவன்ச, முகாமைத்துவ பணிப்பாளர் சமன் ஹேரத், பொதுமுகாமையாளர் அஜீத் ஜயசிங்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.