ஒரே தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கு அவதூறு பரப்பும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் கணினியில் கிராபிக்ஸ் (Graphics) செய்த அவரது படங்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் மாணவன் ஒருவர் முள்ளியவளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளியவளைப் பாடசாலை ஒன்றில் தரம் 12இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடை வகுப்பில் கல்வி கற்ற மாணவியின் படங்களை எடுத்து அவற்றை கிராபிக்ஸ் செய்த மாணவன், முகநூல், வட்ஸ்அப் ஆகியவற்றில் பதிவேற்றி மாணவியை காதலிக்குமாறு மிரட்டியுள்ளார்.
அதனால் அச்சமடைந்த மாணவி தனது கல்வியை கடந்த ஆண்டே இடைநிறுத்தியுள்ளார். அத்துடன் அவருக்கு அண்மையில் திருமணமும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் மாணவியின் மேலும் சில படங்களை அருவருக்கத் தக்க வகையில் கிராப்பிக்ஸ் செய்து அவற்றை சமூக ஊடகங்களில் அந்த மாணவன் பதிவேற்றியதுடன், தன்னிடம் வருமாறும் அச்சுறுத்தி வந்துள்ளார்.
இதுதொடர்பில் அறிந்த மாணவியின் உறவினர்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனடிப்படையில் மாணவி முல்லைத்தீவு வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் நேற்று மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், மாணவன் நேற்றுக் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் மாணவன் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.