Tuesday 25 August 2020

வடக்கில் ஆளுநராக நியமிக்கப்பட்ட மேஜர் சந்திரசிறியே ஒழுங்காக வேலைகளை செய்தார் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..!!!

SHARE



வடமாகாண முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பின்னர் வடக்கில் நியமிக்கபட்ட எந்த சிவில் அதிகாரிகளும் தமது ஆளுநர் வேலையை ஒழுங்காக செய்யவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர், அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை சந்தித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அரச நியமனங்களில் பலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களிற்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் அவர்களது சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பின் அவர்கள் பட்டதாரிகளாக உள்வாங்கப்பட வேண்டும் என்பது தான் அரசாங்கத்தினுடைய இறுதி நிலைப்பாடாக இருந்தது.

அந்த வகையில் மேலதிகமாக 10 ஆயிரம் பேருக்கு அரச நியமனத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி இணங்கியிருக்கின்றார். அந்தவகையில் ஈ.பி.எப், மற்றும் மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருந்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் மேல்முறையீட்டிற்காக விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத்திட்டம் வடக்கிலும், கிழக்கிலும் செயற்படுத்தப்படும். இந்தவிடயம் தொடர்பாக இன்று அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளேன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை தென்னிலங்கை தலைவர்கள் மாத்திரம் எதிர்க்கவில்லை. தமிழ் தலைவர்களும் அதனை எதிர்த்துள்ளனர். 13ஆவது திருத்தச்சட்டததை விடுத்து வேறு ஒரு தீர்வு வேண்டும் என்று புலித் தலைமை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அன்று இதனை எதிர்த்தார்கள்.

எனினும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. என்னுடைய நிலைப்பாடும் அதுவே. அதுதான் சாத்தியமானது. மக்கள் எனக்கு கூடிய ஆசனங்களை தந்திருந்தால் இவற்றை நான் இலகுவாக தீர்த்திருப்பேன்.வடக்கில் இராணுவ அதிகாரியை ஆளுநராக நியமிக்கும் நிலைப்பாடு இதுவரை அரசிடம் இல்லை என்றார்.

SHARE