வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்று (சார்வரி மீ ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை காலை 6.05 – 7.28)மணியளவில் இடம்பெற்றது.
இயற்கை எழில் சூழ்ந்து நீர்வளம், நிலவளம், கனிவளம், மலைவளம் என இயற்கை வளங்களும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஆசியா கண்டத்தின் இந்து சமுத்திரத்தின் முத்தென திகழ்கின்றதும் திருமூல நாயனாரால் சிவபூமி எனப் போற்றப்பட்டதும்,பஞ்ச ஈச்சரங்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் இலங்காபுரியில் ஆறாவதாகப் போற்றப்படுகின்ற வவுனியா – கோவில்குளம் எனும் திவ்ய சேத்திரத்தில் காசியில் இருந்து எழுந்தருளி அடியவர்களின் மனக்குறையினை அகற்றி இடர்களைந்து இன்னல்கள் தீர்த்து சித்திகள் அருளும் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நாற்திசைகளிலும், புதிதாக அமைக்கப்பட்ட அதிசுந்தர இராஜகோபுரங்களுக்கும் விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரையான மூர்த்திகளுக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் பெருமானுக்கும் நிகழும் சார்வரி வருடம் ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை மூலநட்சத்திரமும் தசமி திதியும் அமிர்த சித்தயோகமும் கூடிய காலை 6.05 மணிமுதல் 7.28 மணி வரையுள்ள சிங்க லக்கின சுபமுகூர்த்தவேளையில் வேத, ஆகம முறைப்படி “சாகித்ய சிரோமணி”, “சிவாகம பாஸ்கரன்”, “நயினை குருமணி”சிவஸ்ரீ வை.மு. பரம முத்துக்குமாரசாமி குருக்கள் நயினை ஆதீன பிரதம குருமணி, ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்,நயினாதீவு – வடகோவை) தலைமையில் பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரமும் பொலிசாரின் பாதுகாப்புக்கும் மத்தியில் இடம்பெற்ற கும்பாபிசேக நிகழ்வினை காண அதிகாலையிலே வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.