1821 சித்திரை 21 ரேவதி நாளில் தனு லக்னத்தில் பிறந்தவர் ஸ்ரீலஸ்ரீ சிவ சங்கர பண்டிதர்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை இவரை சைவ மாபாடியம் தந்த சிவஞானமுனிவரின் மறுவடிவம் என்பார்.
இவரே இன்றுள்ள நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்னோடியாக, அவ்விடத்தில் ஒரு திண்ணை பள்ளிக்கூடத்தை அமைத்தவர்.
சம்ஸ்க்ருதத்தில் சரளமாக எழுதவும் பேசவும் வல்ல பண்டிதரிடம் இலங்கையரும் தமிழகத்தவரும் ஏராளமானவர்கள் கற்றிருக்கிறார்கள்.
சத்த சங்கிரஹம், சம்ஸ்க்ருத பால பாடங்கள், தாதுமாலை, நிகண்டு, சித்தாந்த சாராவளி லகுடீகை, பிரசாத சட்சுலோகி உரை, அக பஞ்ச சஷ்டீ உரை என பல நூல்கள் இவரால் எழுதப்பட்டவை
ம்ருகேந்திர விருத்தி, பௌஷ்கர வ்ருத்தி, சித்தாந்த ப்ரகாசிகை, அகோர சிவாசார்ய பத்ததி போன்றன இவரால் பதிப்பிக்கப்பட்டன.
பண்டிதரது மிலேச்ச மத விகற்பம், கிறிஸ்து மத கண்டனம், சிவ தூஷண கண்டனம் ஆகிய நூல்கள் அக்காலத்தில் மத மாற்றிகளான கிறிஸ்தவர்களுக்கு பேரிடராக அமைந்தன.
இது குறித்து எனது நூல் வெளியீடொன்றில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி. ஜெபநேசன் அவர்கள் சொல்லும் போது " பண்டிதருடைய கிறிஸ்து மத கண்டனங்கள் தனித்துவமாகவும் மிகவும் பலமாகவும் இருந்ததாக கிறிஸ்தவ மிஷனரிக்குறிப்புகள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டமை கவனத்திற்குரியது.
கிரந்த லிபியில் முதல் சம்ஸ்க்ருத அகராதி தந்தவர் பண்டிதர் அவர்களே என்றொரு கருத்தும் உண்டு.
பண்டிதர் அவர்கள் பிறப்பால் பிராமணர் அல்லர். ஆனால், அவரிடம் ஏராளமான குருமார்கள் கற்றிருக்கிறார்கள்.
பண்டிதர் புதுச்சேரியில் தர்க்கம் படிப்பித்துக் கொண்டிருந்த போது இளம் வயதிலேயே சிவபதமடைந்து விட்டார்.
இவரது புதல்வர்கள் இருவரும் மிக்க அறிவு கொண்ட பண்டிதர்கள். மூத்தவரான சிவப்பிரகாச பண்டிதர் ஏராளமான நூல்களை எழுதியவர்.
--
குறித்த சிவப்பிரகாச பண்டிதரே அச்சுவேலி சிவஸ்ரீ .குமாரசுவாமிக்குருக்களுக்கு சம்ஸ்க்ருத ஆசிரியராக விளங்கினார். அதனை குருக்கள் நன்றியோடு பல இடங்களில் எழுதியுள்ளார்.
இத்தகு சங்கர பண்டிதர் பெருமகனாரின் 200 ஆவது ஜெனன தினம் இன்னும் சில மாதங்களில் வர இருக்கிறது.
பண்டிதருக்கு பண்டிதர் வாழ்ந்த இடத்தில் ஒரு சிலை நிறுவுவதும், அவரது நூல்களை தேடி பதிப்பிப்பதும் பெரும் பணியாகும்.
அவர் பேரில் ஒரு வாசிகசாலை கரந்தன் வீதியில் உண்டு. இந்த நிலையத்தின் விழாவுக்காக பண்டிதர் சரிதம் எழுதப்பட்டு, 1950 களில். சிவஸ்ரீ. குமாரசுவாமிக்குருக்களால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அது 2000 ஆம் ஆண்டு எமது தந்தை நீர்வை மணி. தியாகராஜக்குருக்களால் மறு பதிப்புச் செய்யப்பட்டது.
இன்று பண்டிதரின் உருவ படங்கள் கிடைத்தில. அவரது நூல்களும் அழிந்து வருகின்றன. விரிவுரையாளர் செல்வமனோகரன் அவர்கள் அந்நூல்களில் சிலவற்றை தொகுத்து "சங்கர பண்டிதம்" என்ற பெயரில் பதிப்பித்திருக்கிறார். அவரது ஓரிரு சம்ஸ்க்ருத நூல்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரமஸ்ரீ. ச. பத்மநாப சர்மா அவர்களால் மீள் பதிப்புச் செய்யப்பட்டுள்ளன.
நீர்வேலியின் புலம் பெயர் உறவுகள் பண்டிதரின் பேர் சொல்லும் பணியில் கை கொடுப்பர் என நம்புகிறேன். அவர் நீர்வை மண்ணின் பெயரை பிரகாசிக்கச் செய்த பெருமகன் ஆவார்.
தியாக. மயூரகிரிக்குருக்கள்,