Wednesday, 20 November 2024

இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்..!!!

இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்..!!!


சூரியன் உதிப்பதைக் கொண்டுதான் நாம் ஒரு நாளின் தொடக்கத்தை கணித்து கொள்கிறோம். அலாஸ்காவில் உள்ள ஒரு நகரத்தில் சுமார் இரண்டு மாதங்கள் வரை சூரியனே தெரியதாம்.

இந்த நகரத்தில் கடைசியாக சூரிய அஸ்தமனமானது 2024 நவம்பர் 18ம் திகதி என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய தீபகற்பம் அலாஸ்காவாகும்.

அலாஸ்கா வட அமெரிக்க கண்டத்தின் வட மேற்கில் அமைந்துள்ளது.

இங்கு உள்ள உட்கியாக்விக் என்னும் நகரத்தில் சுமார் 4,500 மக்கள் வசிக்கின்றனர்.

அங்கு ஒவ்வொரு ஆண்டின் கடைசியிலும் சூரியன் இரண்டு மாதங்கள் வரை தென்படாதாம்.

ஏனெனில் இக்காத்தில் துருவ இரவு (Polar Night) சீசனுக்குள் இந்நகரம் நுழைகிறது.

இந்த துருவ இரவு என்னும் நிகழ்வானது ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கு நிகழுமாம்.

துருவ இரவு என்பது பூமியின் தென் துருவம் மற்றும் வட துருவப் பகுதிகளில் 24 மணிநேரத்திற்கும் மேல் இரவு பொழுது நீடிப்பதைக் குறிக்கிறது.

பெரும்பாலும் இம்மாதிரியான நிகழ்வு துருவ வட்டங்களில் மட்டுமே நிகழும்.

இதில் உட்கியாக்விக் நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.

பூமியில் உட்கியாக்விக் நகரம் இருக்கும் பகுதியை எடுத்துக் கொண்டால் இந்த துருவ இரவு காலகட்டத்தில் பூமியானது அதன் அச்சில் 23 1/2 டிகிரியில் சாய்ந்திருக்கும்.

இப்படி பூமி அச்சின் சாய்வு காரணமாக, இந்த நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்க்காலத்தில் இந்த மாதிரியான ஆச்சரியமான நிகழ்வு நடக்கிறது.

நவம்பர் 19ம் திகதி முதல் இருளில் மூழ்கிய இந்த நகரத்தில் மீண்டும் சூரியனை அடுத்த ஆண்டு 2025 ஜனவரி 23ம் திகதி காண முடியும்.

சூரியன் இந்த நகரத்தில் கண்ணில் படாமல் இருக்குமே தவிர மற்ற படி பகல் வேளையில் இந்நகரமானது நீல நிறத்திலும் இரவு வேளையில் இருட்டாகவும் இருக்கும்.

மேலும் சூரியன் இங்கு தெரியாததால் மிகவும் கடுமையான குளிரை அனுபவிக்கக்கூடும்.

ஏனெனில் இங்கு இக்காலத்தில் வெப்பநிலையானது மைனஸ் 23 டிகிரியாக இருக்கும்.

இதனால் இங்கு வாழும் மக்கள் குளிரால் மிகவும் சிரமப்படுவார்கள்.

அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் நகரத்திற்கு செல்ல வேண்டுமானால் சாலை வழியாக செல்ல முடியாது.

இந்நகரத்திற்கு செல்ல ஒரே வழி விமானம் தான். விமானத்தின் உதவியுடன் மட்டுமே இந்த நகரத்திற்கு செல்ல முடியும்.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் பிற பிராந்திய விமான நிறுவனங்கள் ஏங்கரேஜ் மற்றும் ஃபேர்பேங்க்ஸில் இருந்து வழக்கமான விமான சேவையை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு..!!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு..!!!


மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று புதன்கிழமை (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் , மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவத்தில் மாங்குள பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் (20 வயது), ஜெயகுமார் விதுசன்( 23வயது ) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். மரியதாஸ் சுவாமிகீர்த்தி (31 வயது) எனும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணதுக்கு நீதி கோரி போராட்டம்..!!!

மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணதுக்கு நீதி கோரி போராட்டம்..!!!


மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக புதன்கிழமை (20) மாலை 4.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்படவேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம் பெற்றது.

போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கும் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் சென்று வழிபட மக்களுக்கு அனுமதி..!!!

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் சென்று வழிபட மக்களுக்கு அனுமதி..!!!


பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு இன்று (20) முதல் தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு செல்பவர்கள் ஏற்கனவே சென்று வந்த பாதையூடாக செல்ல முடியும்.










வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு..!!!

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு..!!!


வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை (20.11.2024) கையளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று(20) காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்தக் காசோலையைக் கையளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த இலங்கைக்கான சீனத்தூதுவர், இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பு இருக்கும் என்று உறுதியளித்தார். வடபகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவதானிக்கையில் சந்தோசமாக இருப்பதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான சீனத் தூதுவரை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் ஊழல் ஒழிப்பு, அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

வடபகுதி விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினையாக அவர்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குரிய வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். மேலும், வடக்கு மாகாணத்தின் மற்றொரு முக்கிய வளமான மீன்பிடி மூலமாக பிடிக்கப்படும் மீன்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனவும் அவை உற்பத்திப் பொருள்களாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்துக்கு சீன அரசாங்கம் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்யும் என்பதைக் குறிப்பிட்ட சீனத் தூதுவர், வடக்கு மாகாண மக்கள் மிகவும் அன்பாக வரவேற்பு உபசரிப்பது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் 800 மில்லியன் மக்களின் வறுமையை கடந்த தசாப்த காலத்தில் இல்லாதொழித்ததாகவும் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலனும் பங்கேற்றார்.
தனது X தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட A .R . ரஹ்மான்..!!!

தனது X தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட A .R . ரஹ்மான்..!!!


பிரபல இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒஸ்கார் விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் இவர்களுடைய விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருப்பது இரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து தனது X தளப் பக்கத்தில், 30 ஆம் ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்ததாகவும், ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டது. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்.

எனினும் இச்சிதறலில் உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் சேராமல் போனாலும், அர்த்தத்தை தேடி வருகிறோம். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
தாய், சிசு உயிரிழப்பு : சுகாதார அமைச்சின் விசேட குழு  வைத்தியசாலைக்கு விஜயம் ; விசாரணைகள் ஆரம்பம்..!!!

தாய், சிசு உயிரிழப்பு : சுகாதார அமைச்சின் விசேட குழு வைத்தியசாலைக்கு விஜயம் ; விசாரணைகள் ஆரம்பம்..!!!


மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழுவொன்று இன்று புதன்கிழமை (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அவ்வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என்றழைக்கப்படும் ஜெகன் ராஜசிறி திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்துக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த தாய் மற்றும் சேயின் உடல்களை பிரேத பரி சோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காக வும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட ரீதியாக இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு வட மாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.